< Back
மாநில செய்திகள்
அலங்காநல்லூரில் திருமணமாகி 6 மாதத்தில் பரிதாபம்.. தனியார் மில் சூப்பர்வைசர் கழுத்து அறுத்து கொலை

கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பொன்மணி

மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் திருமணமாகி 6 மாதத்தில் பரிதாபம்.. தனியார் மில் சூப்பர்வைசர் கழுத்து அறுத்து கொலை

தினத்தந்தி
|
17 Sept 2022 11:11 AM IST

அலங்காநல்லூர் அருகே தனியார் மில் சூப்பர்வைசர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளிவேளிபட்டி ஊராட்சி, கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் பொன்மணி (வயது 25). இவர் தனிச்சியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது.

நேற்று நள்ளிரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் தலையில் வெட்டு காயங்களுடன் பொண்மணி சடலமாக கிடந்தார்.

அவ்வழியாக சென்றவர்கள் பொன்மணி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சமயநல்லூர் சரக டிஎஸ்பி பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

முன்விரோதம் காரணமா? இல்லை வேறு ஏதும் பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்