< Back
மாநில செய்திகள்
நீலகிரியில் யானை வழித்தடத்தில் தனியார் விடுதிகள் - 15 நாட்களுக்குள் இடிக்க நோட்டீஸ்
மாநில செய்திகள்

நீலகிரியில் யானை வழித்தடத்தில் தனியார் விடுதிகள் - 15 நாட்களுக்குள் இடிக்க நோட்டீஸ்

தினத்தந்தி
|
18 Aug 2024 8:12 PM IST

நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தனியார் விடுதிகளை 15 நாட்களுக்குள் இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 2008-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் உயர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2018-ம் ஆண்டு யானை வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி 30-க்கும் மேற்பட்ட விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதனிடையே யானை வழித்தட வழக்கில் மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் கோர்ட்டில் பல்வேறு தவறான தகவல்களை வழங்கி இருப்பதாக விடுதி உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கபட்டது.

அந்த கமிட்டி, சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் முடிவில், தனியார் தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு, பின்னர் வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும் எனவே அவற்றை இடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி தற்போது மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தனியார் தங்கும் விடுதிகள், பொக்காபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 20 தனியார் தங்கும் விடுதிகள் என ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ள 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


மேலும் செய்திகள்