< Back
மாநில செய்திகள்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை
மாநில செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை

தினத்தந்தி
|
29 Jun 2022 10:01 AM GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணனிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு,கொடநாடு வழக்கு தொடர்பாக 220 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில்,அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கண்ணனிடம் நேற்று விசாரணை நடத்திய நிலையில், தற்போது 2-வது நாளாக ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு கொலை,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் ஏற்கனவே இவருக்கு தொடர்பு இருந்ததா?,மேலும், கொலை, கொள்ளைக்கு பிறகு கண்ணனை யாராவது தொடர்பு கொண்டார்களா? என்ற கோணத்தில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்