கள்ளக்குறிச்சி
மான் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தனியார் கம்பெனி அதிகாரி பலி
|சின்னசேலம் அருகே பரிதாபம் மான் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தனியார் கம்பெனி அதிகாரி பலி
சின்னசேலம்
சேலம், மாவட்டம், பச்சப்பட்டி கிராமம், ஆறுமுகம்முதலி தெருவை சேர்ந்தவர் முத்து மகன் தமிழ்ச்செல்வன்(வயது 34). இவர் கள்ளக்குறிச்சி துருகம்சாலையில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற தமிழ்செல்வன் நேற்று காலை சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது சாலையின் தடுப்பு சுவரில் இரைமேய்ந்துகொண்டிருந்த மான் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே கடந்து செல்ல முயன்றபோது எதிர்பாரதவிதமாக தமிழ்செல்வன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தமிழ்செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான தமிழ்செல்வனுக்கு லதா என்ற மனைவியும் 3 மாத குழந்தையும் உள்ளனர்.
விபத்தில் இறந்துபோன மானை வனவர் சின்னதுரை, வனக்காப்பாளர் மற்றும் வன காவலர் ஆகியோர் முன்னிலையில் தொட்டியம் கால்நடை உதவி மருத்துவர் ஜெயகாந்தி உடற்கூறாய்வு செய்த பின்னர் அதை மலைக்கோட்டாலம் காப்பு காட்டில் வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர்.