திண்டுக்கல்
தனியார் நிறுவன ஊழியர் பலி
|அரசு பஸ் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 36). தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது ஊர் நோக்கி வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் தேனி மாவட்டம் போடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் அந்த சாலையில் சென்று கொண்டிருந்தது.
வத்தலக்குண்டு மஞ்சளாற்று பாலம் அருகே வந்தபோது அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி, உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்தனர். ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர், தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து அக்கம்பக்கத்தினரிடம் கொடுத்தார். மேலக்கோவில்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் தங்கபாண்டி மற்றும் சிலர், அந்த வேட்டியில் தூக்கி பெரியசாமியை வைத்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான பெரியசாமிக்கு கனிமொழி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.