விழுப்புரம்
தனியார் பஸ் மோதி விபத்து; ஓய்வுபெற்ற அரசு டிரைவர் பலி
|விழுப்புரம் அருகே தனியார் பஸ் மோதி ஓய்வுபெற்ற அரசு டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த பஸ்சின் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே கோலியனூரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 62). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று காலை 8.15 மணியளவில் கோலியனூரில் உள்ள ஒரு கோவில் எதிரே நடந்து சென்றவாறு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அதே திசையில் பின்னால் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்று, தட்சிணாமூர்த்தியின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவரும், கண்டக்டரும் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
இதனிடையே விபத்தில் தட்சிணாமூர்த்தி பலியானதை கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அங்கு தட்சிணாமூர்த்தி இறந்து கிடந்ததை பார்த்து ஆத்திரமடைந்த அவர்கள், அருகில் கிடந்த கற்களை எடுத்து பஸ் கண்ணாடி மீது வீசி உடைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வரும் தனியார் பஸ் டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது விபத்தை ஏற்படுத்திய டிரைவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் முறையிட்டனர்.
இதை கேட்டறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மீது கைது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் தட்சிணாமூர்த்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தட்சிணாமூர்த்தியின் மனைவி பச்சம்மாள் கொடுத்த புகாரின்பேரில் பஸ் டிரைவரான விக்கிரவாண்டி அருகே பிரம்மதேசத்தை சேர்ந்த ஜெயக்குமார் (36) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.