திருப்பூர்
வீட்டில் இருந்து பொருட்களை தெருவில் வீசி எறிந்த தனியார் வங்கி ஊழியர்கள்
|பல்லடத்தில் வீட்டுக்கடன் தவணை தொகை செலுத்தாததால் கடன் வாங்கியவரின் வீட்டில் இருந்த பொருட்களை தனியார் வங்கி ஊழியர்கள் தெருவில் வீசினர். மேலும் வீட்டில் இருந்த நோயாளி முதியவரையும் சாலையில் இழுத்து தள்ளியதாக கூறப்படுகிறது.
தனியார் வங்கி
திருப்பூர் அருகே உள்ள அருள்புரம் செந்தூர் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75). பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடைய மனைவி ருக்மணி. இவர்கள் 2 பேரும் பேரன் தினேஷ்குமாருடன் வசித்துவருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2021 -ம் ஆண்டு புது வீடு கட்டுவதற்காக அருள்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் தினேஷ் குமார் பெயரில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதன்பின்னர் மாதம் ரூ.11 ஆயிரம் வீதம் ரூ.2½ லட்சம் வரை தவணைத் தொகையை திருப்பி செலுத்தி உள்ளார்.
இந்த மாதம் 10-ந் தேதி கட்ட வேண்டிய தவணைத்தொகையை குடும்ப சூழல் காரணமாக செலுத்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கந்தசாமியின் வீட்டிற்கு தினேஷ், மணி என 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தாங்கள் வங்கியில் இருந்து வருவதாகவும், இந்த மாதம் தவணைத் தொகையை கட்டாததால் வீட்டை பூட்டு போட வந்துள்ளோம் எனவும், வீட்டில் உள்ள டி.வி., இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உள்ளோம் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
முதியவரை சாலையில் தள்ளிய கொடூரம்
மேலும் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசி, கந்தசாமியை நாற்காலியில் அமர வைத்து அவரை சாலையில் கொண்டு வந்து விட்டுள்ளனர். இதை பார்த்த ெபாதுமக்கள் அவர்கள் இருவரையும் சிறை பிடித்தனர். இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.