திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே தனியார் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
|ஊத்துக்கோட்டை அருகே தனியார் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி ஊத்துக்கோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மர்ம நபர்கள் தனியார் ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம்.மில்கொள்ளை முயற்சி
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பூண்டி அடுத்துள்ள நெய்வேலி கூட்டு ரோட்டில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றனர். அப்போது ஏ.டி.எம்.மில் உள்ள கண்காணிப்பு கேமராவுக்கு கருப்பு சாயம் பூசப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் பென்னாலூர் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுதாகர், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்திர கோளாறு காரணமாக ஏ.டி.எம். மையம் கடந்த 3-ந் தேதி முதல் செயல்படவில்லை. இதனால் அதிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என்பது தெரிய வந்தது.
விசாரணை
இதனை அடுத்து போலீசார் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் எலக்ட்ரீசியன்கள் துணையுடன் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து பார்த்தபோது அதில் ரூ.23 ஆயிரத்து 500 பணம் இருந்தது. கொள்ளை ஏதும் நடைபெறவில்லை. இரவில் கொள்ளையடிக்க சென்ற மர்ம நபர்கள் திருடுவது கேமராவில் பதிவு ஆகாமல் இருக்க கண்காணிப்பு கேமராவுக்கு சாயம் பூசி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.