< Back
மாநில செய்திகள்
போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம் 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
சென்னை
மாநில செய்திகள்

போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம் 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
29 July 2023 7:37 AM IST

போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடியதால், பணியின்போது அஜாக்கிரதையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தண்டையார்பேட்டை,

சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்ற தர்பார் (வயது 20) என்ற வாலிபரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக அவரது வீட்டுக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீஸ்காரர் வீரபத்திரன் ஆகியோர் ஆட்டோவில் கைதி ஹரிஹரனை அழைத்துச்சென்றனர்.

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே செல்லும்போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆட்டோவில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரிசெய்ய முயன்றார். இதை பயன்படுத்தி கைதி ஹரிஹரன், போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வீட்டில் பதுங்கி இருந்த ஹரிஹரனை மீண்டும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி, பணியின்போது அஜாக்கிரதையாக இருந்து கைதியை தப்ப விட்டதாக கூறி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீஸ்காரர் வீரபத்திரன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்