கைதிகள் தப்பியோடிய விவகாரம்: 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
|தப்பியோடிய கைதிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு,
உண்டியல் திருட்டு வழக்கில் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி, போலீஸ்காரர்கள் கீதாமணி, அருண்ராஜ், பழனிச்சாமி ஆகிய 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் முழுவிவரம்:-
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள மேற்குபதியை சேர்ந்தவர் சேது (வயது 25). இவருடைய தம்பி அஜித் (24). இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி வந்தனர்.கடந்த மாதம் 30-ந் தேதி அண்ணன், தம்பி இருவரும் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த பரணி (30) என்பவருடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடியுள்ளனர்.
அதன்பின்னர் அவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்றபோது நம்பியூர் அருகே கெடாரை என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வரப்பாளையம் போலீசாரிடம் பிடிபட்டனர். அப்போது சேதுவும், அஜீத்தும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு கடத்தூர் மற்றும் நம்பியூர் போலீசார் இணைந்து மேற்குபதியில் வீட்டில் பதுங்கி இருந்த சேது, அஜீத்தை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் சிறுவலூர் பகுதியில் நடந்த ஒரு கோவில் உண்டியல் திருட்டு சம்பவத்தை விசாரிக்க போலீசார் சேது, அஜீத் இருவரையும் காவலில் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக கோபி மாவட்ட சிறையில் இருந்து இருவரையும் சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி, போலீஸ்காரர்கள் கீதாமணி, அருண்ராஜ், பழனிச்சாமி ஆகியோர் கோபி கோர்ட்டுக்கு நேற்று காலை அழைத்து வந்திருந்தனர்.
கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் இருவரையும் போலீசார் கோர்ட்டுக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது திடீரென சேதுவும், அஜீத்தும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஆளுக்கொரு திசையில் ஓடினர். இதனால் அவர்களை அழைத்து வந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை பிடிக்க துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஆனால் பிடிக்க முடியவில்லை.
தப்பிஓடிய சேது, அஜீத் இருவரையும் பிடிப்பதற்காக கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோபி, நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், கவுந்தப்பாடி, திங்களூர், சிறுவலூர் ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீசார் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.