கடலூர்
கைதி தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி
|கடலூர் மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
கடலூர் அருகே கேப்பர்மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிதம்பரத்தை சேர்ந்த பரஞ்சோதி மகன் வெற்றிச்செல்வன் (வயது 35) என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். தனிமை சிறையில் அடைக்கப்பட்ட வெற்றிச்செல்வன் நேற்று முன்தினம் இரவு திடீரென கைலியால் தூக்குப் போட்டுக்கொண்டார்.
தீவிர சிகிச்சை
இதை பார்த்த சிறைக்காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனிமை சிறையில் அடைக்கப்பட்டதால், மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈ:டுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.