< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் பெண் போலீசை தாக்கி விட்டு தப்பியோடிய கைதி பிடிபட்டார்
கரூர்
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் பெண் போலீசை தாக்கி விட்டு தப்பியோடிய கைதி பிடிபட்டார்

தினத்தந்தி
|
18 Aug 2022 12:11 AM IST

பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசை தாக்கி விட்டு தப்பியோடிய கைதி முட்புதரில் மறைந்து இருந்தபோது பிடிபட்டார்.

கைதி

கரூர் அருகே உள்ள புலியூர் வடக்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் கொடியரசு (வயது 35). இவர் மீது பிக்பாக்கெட் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் பொதுமக்களிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்றார்.இதையடுத்து பொதுமக்கள் கொடியரசை பிடித்து தர்மஅடி கொடுத்து பசுபதிபாளையம் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கொடியரசை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்தில் அழைத்து வந்து வைத்திருந்தனர்.

தப்பியோட்டம்

இந்நிலையில் நேற்று காலை ேபாலீஸ் நிலையத்தில் இருந்த கைதி கொடியரசுவிற்கு போலீசார் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது போலீஸ் நிலையத்தில் ஒரு சில போலீசார் மட்டுமே இருந்துள்ளனர். கொடியரசு சாப்பிட்டு முடித்து விட்டு கைகழுவுவதற்காக போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது பெண் போலீஸ் ஒருவரும் அவருக்கு பின்னால் வந்துள்ளார். அப்போது திடீரென கொடியரசு அந்த பெண் போலீசை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

மடக்கி பிடித்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் மற்ற போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அப்பகுதி முழுவதும் அங்குலம், அங்குலமாக தேடிப்பார்த்தனர். இதையடுத்து கொடியரசு கரூர் அமராவதி ஆற்றுப்பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பசுபதிபாளையம் போலீசார் துரிதமாக செயல்பட்டு அங்கு சென்று கொடியரசை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் நேற்று கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்