திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைக்காவலர்
|திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட திருநங்கைக்கு சிறைக்காவலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
திருச்சி,
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 32 வயது திருநங்கை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக்காவலர் மாரீஸ்வரன் திருநங்கைக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திருநங்கை சிறை கண்காணிப்பாளர், சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆகியோரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாரீஸ்வரன் மீது திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். துறைரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில், சிறைக்காவலர் மாரீஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மாரீஸ்வரன் தலைமறைவானார்.
இதனால் தனிப்படை அமைத்து மாரீஸ்வரனை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சிறைக்காவலர் மாரீஸ்வரனை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.