விருதுநகர்
அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை
|சிவகாசி மாநகராட்சி பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கப்படும் என புதிய கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சிவகாசி மாநகராட்சி கமிஷனராக இருந்த சங்கரன் இடமாறுதல் காரணமாக சென்னை ஆவடி மாநகராட்சிக்கு சென்று விட்டார். இந்தநிலையில் புதிய கமிஷனராக கிருஷ்ணமூர்த்தி பதவி ஏற்றுக்கொண்டார். அவரை நகர முக்கிய பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் புதிய கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகாசியில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. இந்த பகுதிக்கு என்ன தேவை என்பது குறித்தும் நான் நன்கு அறிவேன். இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினை கவுன்சிலர்களின் கோரிக்கைகளை உடனே தீர்க்க முன்னுரிமை கொடுக்கப்படும்.
அதிலும் குறிப்பாக குடிநீர், சாலை, வாருகால் போன்ற அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும். நகரில் நடைபெற்று வரும் சுகாதார பணிகளை ஆய்வு செய்தேன். குப்பைகளை தினமும் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தங்கல் பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை அரசிடம் இருந்து கேட்டு பெற்று செய்து தருவேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 11-வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சாமுவேல், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து தனது வார்டு பகுதியில் 3 இடங்களில் பாலம் அமைக்க வேண்டும் என்றும், கழிவுநீர் வாருகால் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.