நாமக்கல்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
|நாமக்கல்லில் நேற்று நடந்த முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1,482 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
விளையாட்டு போட்டிகள்
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதையொட்டி மாவட்டந்தோறும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், இறகுப்பந்து மற்றும் கையுந்துபந்து போட்டிகள் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
1,482 மாணவர்கள் பங்கேற்பு
இதில் 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 1,482 பேர் கலந்து கொண்டனர். குறிப்பாக தடகள போட்டியில் 766 பேர், கையுந்து பந்து போட்டியில் 51 அணியினர், இறகு பந்து ஒற்றையர் பிரிவில் 66 பேர், இரட்டையர் பிரிவில் 19 அணியினர் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வருகிற 15-ந் தேதி வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.