பிரதமர் மோடி இன்று கோவை வருகை: 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
|பிரமாண்ட வாகன அணிவகுப்பில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து பொதுமக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக இன்று (திங்கட்கிழமை) தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார்.
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகாலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் வாகன அணிவகுப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று முடிவடைகிறது. அங்கு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கும் சாய்பாபாகாலனிக்கு செல்கிறார். தொடர்ந்து வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறத்திலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதற்கிடையே பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் கோவையில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அந்த பிரிவை சேர்ந்த ஐ.ஜி. லவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆர்.எஸ்.புரத்தில் வாகன அணிவகுப்பு முடியும் இடத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாகன அணிவகுப்பு நடைபெறும் பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் நேற்று பிற்பகல் கோவை வந்தார். பின்னர் அவர் பிரதமர் வருகையையொட்டி போடப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அத்துடன் வாகன அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து கோவைக்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகன அணிவகுப்பு நடைபெறும் சாலையில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்தப்பகுதி முழுவதும் போலீசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. அத்துடன் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே மாநகர பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்காக மாநகர பகுதியில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.