< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு நாட்டுக்கே அவமானம்- செல்வப்பெருந்தகை தாக்கு
மாநில செய்திகள்

பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு நாட்டுக்கே அவமானம்- செல்வப்பெருந்தகை தாக்கு

தினத்தந்தி
|
18 May 2024 3:57 PM IST

தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு நாட்டுக்கே அவமானம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாடாளுமன்ற தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிறது.அதனால் நிதானமிழந்து ஆத்திரம் பொங்க கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசி வந்தவர், 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி கோவிலை புல்டோசரால் இடித்து விடுவார்கள்" என்று அபாண்டமாக காழ்ப்புணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார். இத்தகைய பேச்சுகளை பேசுகிற ஒருவர், 10 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்தது இந்தியாவிற்கே அவமானமாகும். இப்படி நச்சுக் கருத்தை கூறுகிற ஒரு பிரதமரை பெற்றதற்காக ஒவ்வொரு இந்தியரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

எதையாவது பேசி, எப்படியாவது எந்த உத்தியையாவது கையாண்டு மூன்றாம் முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கிற பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் வாய்க்கு வந்தபடி கருத்துகளை கூறிக் கொண்டிருக்கிறார்.தொடக்கத்தில் 370, 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசிய பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்று தோல்வி பயத்தில் அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்த கணிப்புகளுக்கு மாறாக மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு படுதோல்வி ஏற்படுவது உறுதியாகி இருக்கிறது.தலைவர் ராகுல்காந்தி பா.ஜ.க. மீண்டும் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என்று உறுதி பட கூறி வருகிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது மக்களின் விருப்பமாக அமைந்து விட்டது. எனவே, மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தினால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்