< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடியின் அறிவிப்புகள் காகித பூ போன்றது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

'பிரதமர் மோடியின் அறிவிப்புகள் காகித பூ போன்றது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
10 March 2024 3:49 AM IST

காங்கிரஸ் அரசு அமைந்தால் முதல் வாக்குறுதியாக மத்திய அரசில் உள்ள 30 லட்சம் காலி இடங்களை பூர்த்தி செய்வோம் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னை,

பிரதமர் மோடி 14 நாளில் மட்டும் ரூ.5,90,661 கோடிக்கு திட்டங்களை அறிவித்து உள்ளார். இதுகுறித்து பட்ஜெட்டில் ஒரு வரி கூட இல்லை. எனவே, இந்த அறிவிப்புகள் காகித பூ போன்றது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "இளைஞர் தினத்தை முன்னிட்டு ராகுல்காந்தி 5 வாக்குறுதிகளை தந்துள்ளார். இந்த 5 வாக்குறுதிகளும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுகிறது. இந்தியாவில் மொத்த வேலையில்லாமை 8 சதவீதம். பட்டம் பெற்றவர்கள் மத்தியில் வேலையில்லாமை 42 சதவீதம்.

இதை போக்கும் வகையில் காங்கிரஸ் அரசு அமைந்தால் முதல் வாக்குறுதியாக மத்திய அரசில் உள்ள 30 லட்சம் காலி இடங்களை பூர்த்தி செய்வோம். 2-வது வாக்குறுதியாக அரசு நடத்தக்கூடிய தேர்வுகளின் கேள்வித்தாள் கசிவை தடுக்க சட்டங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைவு கோர்ட்டில் உடனடியாக தண்டனை பெற்று தருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

3-வது வாக்குறுதியாக பயிற்சியாளர்கள் சட்டத்தை கொண்டு வந்து, தனியார், அரசு பொதுத்துறை நிறுவனம் இரண்டுமே கட்டாயமாக பயிற்சியாளர்களை பணிக்கு வைக்க வேண்டும் என்போம். அதன்படி, 10 லட்சம் நிறுவனங்களில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பயிற்சி தொகை வழங்கப்படும்.

4-வதாக ஆங்கிலத்தில் 'கிக்' தொழிலாளர்கள் என்று சொல்லப்படும் சொமேட்டோ, சுவிக்கி போன்ற தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவோம். 5-வது வாக்குறுதியாக, இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ.10 கோடி வீதம் சுமார் ரூ.5,500 கோடி வழங்குவோம்.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பை வரவேற்கிறேன். ஆனால் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த ரூ.100-ஐ கூட்ட மாட்டேன் என்று பிரதமர் சொல்ல வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. சட்டத்தை யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் திருத்தி அமைப்போம். 14 நாளில் மட்டும் ரூ.5,90,661 கோடிக்கு பிரதமர் மோடி திட்டங்களை அறிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.17,300 கோடியை அறிவித்துள்ளார். இதற்கெல்லாம் பட்ஜெட்டில் ஒரு வரியை கூட நான் பார்க்கவில்லை. எனவே பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புகள் என்பது காகித பூ போன்றதுதான்.

எஸ்.பி.ஐ. வங்கி மத்திய பா.ஜனதா அரசுக்கு உடந்தையாக செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். தேர்தல் பத்திரங்கள் என்பது பெரிய விடுகதை அல்ல. மொத்தம் 21,127 பத்திரங்கள்தான் விற்கப்பட்டுள்ளது. அதுவும் 10 கிளைகளில்தான் விற்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் தனி எண் உள்ளது. எனவே, இந்த விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கியால் ஒரே நாளில் வழங்க முடியும். சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பை தரும் என நம்புகிறேன்" என்று ப.சிதம்பரம் கூறினார்.

மேலும் செய்திகள்