< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை- பாதுகாப்பு அதிகரிப்பு
மாநில செய்திகள்

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை- பாதுகாப்பு அதிகரிப்பு

தினத்தந்தி
|
14 March 2024 12:54 PM IST

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார்.

கன்னியாகுமரி,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதற்காக நாளை (வெள்ளிக்கிழமை)காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். பின்னர் அவர் அங்கு இருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரி மைதானத்தில் நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார். மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக வெளி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கன்னியாகுமரிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்து உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.

மேலும் ஹெலிகாப்டர் தளம் அமைந்துள்ள மைதானம், அரசு விருந்தினர் மாளிகை, பிரதமர் மோடி செல்லும் பாதை ,பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் ஆகிய இடங்களில் போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் தளம், பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

மேலும் செய்திகள்