கன்னியாகுமரி கடல் நடுவில் இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்கிறார் பிரதமர் மோடி
|கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்களுக்கு தியானம் செய்கிறார்.
கன்னியாகுமரி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இறுதிக்கட்டமான 7-வது கட்ட தேர்தல் 1-ந் தேதி நடைபெறுகிறது. 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் தேர்தல் முடிவடைந்தபோதும் அவர் தியானம் மேற்கொண்டார். 2014-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரதாப்கர்கோட்டையிலும், 2019-ம் ஆண்டு இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் அவர் தியானம் மேற்கொண்டார். அதேபோல நாடாளுமன்ற தேர்தல் நிறைவடையும் நிலையில் தற்போதும் தியானம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதற்காக அவர் இந்த முறை தமிழகத்தை தேர்வு செய்துள்ளார். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு சுவாமி விவேகானந்தர் தவம் இருந்து ஞானம் பெற்றதாக கூறப்படும் கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.
இதற்காக அவர் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் மாலை 4.35 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்று மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
அதன்பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு சென்று தனிப்படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று மாலை 6 மணி அளவில் தியானத்தை தொடங்குகிறார். 3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1-ந் தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
3 நாட்கள் தியானம் முடிந்ததும் பிரதமர் மோடி 1-ந் தேதி பிற்பகலில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனி படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளம் வந்து சேர்கிறார். அங்கிருந்து காரில் ஏறி, அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பிறகு பிற்பகல் 3.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் அவர் 4.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இரவு 7.30 மணிக்கு அவர் டெல்லியை சென்றடைகிறார். விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் மேற்கொள்வது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சி புகார்
இதற்கிடையே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் தியானம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் அளித்து உள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, அபிஷேக் சிங்வி மற்றும் சையத் நாசர் உசேன் ஆகியோர் நேற்று தேர்தல் கமிஷனில் நேரில் இந்த புகார் மனுவை அளித்தனர்.
தி.மு.க. மனு
இதேபோல் தி.மு.க. குமரி மேற்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வந்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஸ்ரீதரிடம் மனு அளித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு புகார்
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிய புகார் மனுவில், தேர்தல் நடத்தை விதியின்படி, வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை இது பாதிக்கும். எனவே இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையத்துக்குள் கன்னியாகுமரி
இதற்கிடையே பிரதமர் மோடி வருவதையொட்டி கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் வந்து செல்லும் இடங்கள் அனைத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவேகானந்தர் மண்டபம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கடலோர காவல் படையினர் நேற்று முன்தினத்தில் இருந்து இரவு, பகலாக கடலோர காவல்படை படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதற்காக சென்னையில் இருந்து ஏராளமான படகுகளும், கடலோர காவல் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சிறிது தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் கடலோர கிராம பகுதிகள் அனைத்தும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது.