< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும்

தினத்தந்தி
|
14 July 2023 12:15 AM IST

கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

மாநில செயற்குழு கூட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் பி.ஆர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய காலத்தில் தேவையான அளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடாததால் மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரும் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறுவை பாசனப்பகுதி வறண்டு கிடக்கிறது. மேலும் 1 லட்சம் ஏக்கர் குறுவை விளைவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

புறக்கணிக்க வேண்டும்

எனவே காவிரி டெல்டா பகுதியை குறுவை பாதித்த பகுதியாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என நயவஞ்சகத்துடன் செயல்படுகிறது. கர்நாடகாவில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதை காவிரி விவசாயிகள் ஏற்க மறுக்கின்றோம். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடகாவில் நடக்கும் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும்.

செயல் இழந்து விட்டது

தேங்காய் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய்யை பொது வினியோகத்திட்டத்தில் சேர்த்து விற்பனை செய்வதை கட்டாயமாக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற எண்ணெய்யை தடை செய்ய வேண்டும். தற்போது சந்தையில் ரூ.100-க்கு மேல் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேளாண்துறையில் விற்பனை பிரிவு ஒட்டுமொத்தமாக செயல் இழந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்