< Back
மாநில செய்திகள்
சிப்காட் தொழில் பூங்காவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிப்காட் தொழில் பூங்காவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

தினத்தந்தி
|
26 Nov 2022 1:16 AM IST

சிப்காட் தொழில் பூங்காவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் அன்று மாலை அரியலூர் மாவட்டம், மாளிகைமேட்டுக்கு சென்று, அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இரவில் அரியலூர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தொழில் பூங்காவிற்கு அடிக்கல்

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் பெரம்பலூருக்கு மதியம் 12 மணிக்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர் விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாளிகைமேட்டில் ஆய்வு

மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்று, அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வருகிறார். பின்னர் இரவு உணவை முடித்து கொண்டு, அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் காலை 9.15 மணிக்கு அரியலூர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காலை 10.45 மணியளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். மதியம் 12.30 மணிக்கு செல்லும் விமானத்தின் மூலம் சென்னைக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூருக்கு வருகை தருவதை முன்னிட்டு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சிப்காட் நிர்வாக இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஐ.ஜி. ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மாளிகைமேட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் பற்றியும், ஆய்வு நடைபெறும் இடத்தையும் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். அப்போது டி.ஐ.ஜி. சரவணசுந்தர், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி உடையார்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள புல், பூண்டு, செடிகளை அந்தந்த ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்