< Back
மாநில செய்திகள்
10 ஆண்டுகளாக என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லி பிரதமரால் ஓட்டு கேட்க முடியவில்லை - திருமாவளவன்
மாநில செய்திகள்

'10 ஆண்டுகளாக என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லி பிரதமரால் ஓட்டு கேட்க முடியவில்லை' - திருமாவளவன்

தினத்தந்தி
|
29 Feb 2024 9:48 PM IST

தங்கள் கொள்கைகளையும், சாதனைகளையும் சொல்லி தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஓட்டு கேட்க முடியவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்லடத்தில் அவர் பேசிய பேச்சு, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வினரின் வாக்கு வங்கியை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்ற சூது நிறைந்த பேச்சாக இருந்தது.

10 ஆண்டுகளாக அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. மாறாக, தி.மு.க. அரசை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை புகழ்ந்து பேசுவது போன்ற உத்திகளை பிரதமர் கையில் எடுத்திருக்கிறார்.

தங்கள் கொள்கைகளையும், சாதனைகளையும் சொல்லி தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஓட்டு கேட்க முடியவில்லை என்பது தெரிகிறது. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை தங்களுக்கான வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு பா.ஜ.க. முயற்சிப்பதும் தெரிகிறது. அ.தி.மு.க.வின் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சங் பரிவாரின் சூழ்ச்சிக்கு இரையாக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்