விழுப்புரம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
|விழுப்புரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் கருணாநிதி, கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் ராஜசேகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச்செயலாளர் ஷேக்மூசா, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுச்செயலாளர் கதிர்வேல், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கன்னியப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்யும்பொருட்டு பி.எட். பயிற்சி பெறும் மாணவர்களை கொண்டு மதிப்பீடு செய்வதை கைவிட வேண்டும், எண்ணும், எழுத்தும் திட்டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிப்பதோடு, ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமையை உருவாக்கும் இத்திட்டத்தை கைவிட வேண்டும், ஆசிரியர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆசிரியர்கள் ஜெயானந்தம், செல்வக்குமார், மாணிக்கம், லூர்துசேவியர், சண்முகசாமி, வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.