< Back
மாநில செய்திகள்
தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி - ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்
சென்னை
மாநில செய்திகள்

தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி - ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்

தினத்தந்தி
|
5 Aug 2022 11:06 AM IST

தோஷம் கழிப்பதாக கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை அவரது பெற்றோர் அடித்து உதைத்தனர். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூசாரி தப்பி ஓடிவிட்டார்.

சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகர், 5-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 55). அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். அந்த கோவிலுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுடன் பெண் ஒருவர் சாமி கும்பிட சென்றார்.

பூசாரி சந்திரசேகர், அந்த மாணவிக்கு சுற்றி போட்டார். பின்னர், "உங்கள் மகளுக்கு தோஷம் உள்ளது. அதை கழிக்க சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்காக எனது வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அப்படி செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்" என அந்த பெண்ணிடம் கூறினார்.

அதை உண்மை என்று நம்பிய மாணவியின் பெற்றோர், பூசாரி சொன்னபடி தங்கள் மகளுடன் அவரது வீட்டுக்கு சென்று தங்கினர். பூசாரி சந்திசேகர், பரிகார பூஜைகள் செய்வதாக கூறி மாணவியை தனிஅறைக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பெற்றோரிடம் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டினார்.

ஆனால் அந்த மாணவி, பரிகார பூஜைகள் செய்வதாக கூறி பூசாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், பூசாரி சந்திரசேகரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் காயம் அடைந்த சந்திரசேகர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையறிந்த பூசாரி சந்திரசேகர், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. தலைமறைவான பூசாரி சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்