சென்னை
தொடர்ந்து விலை ஏறுமுகம்: ரேஷன் கடைகளில் தக்காளி வாங்க அலை மோதிய கூட்டம் - கூடுதலாக விற்பனைக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
|தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் ரேஷன் கடைகளில் தக்காளி வாங்க கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகமாக விற்பனைக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ரேஷன் கடைகளில் 2-வது நாளாக நேற்றும் தக்காளி விற்பனை நடந்தது. பொதுமக்கள் காலையிலேயே ரேஷன் கடைகளுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தாக்காளி வாங்கி சென்றனர். இருந்தாலும், கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக நேற்று கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து, சில்லரை விற்பனையில் ரூ.120 முதல் ரு.130 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், கொத்தமல்லி ஒரு கிலோ ரூ.300, இஞ்சி ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிகள் விலை அதிகமாக இருப்பதால் வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.5-க்கு தக்காளியை கூவி கூவி விற்பனை செய்தும் எவரும் திரும்பி பார்க்கவில்லை. இதனால் விவசாயிகள் தக்காளியை பொது இடங்களிலும், நீர் நிலைகளிலும் கொட்டி அழித்தனர். ஆனால் இப்போது திடீரென்று தக்காளிக்கு மவுசு வந்து உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுவதால் ஒவ்வொரு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கருணா, படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அன்பழகன் ஆகியோர் கூறும் போது, 'ரேஷன் கடைகளுக்கு காலையில் 3 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்க நூற்றுக்கணக்கானவர்கள் கூடி நிற்கின்றனர். ஒருவருக்கு ஒரு கிலோ என்று வழங்கப்பட்டாலும், அனைவருக்கும் தக்காளி கிடைப்பதில்லை. எனவே சற்று தக்காளி அதிகமாக விற்பனை செய்தால் அனைவருக்கும் கிடைக்கும்' என்றார்.
அதேபோல் ரேஷன் கடை ஊழியர் மாலதி கூறும் போது, 'எங்கள் கடைக்கு 2 பெட்டிகளில் 42 கிலோ தக்காளி விற்பனைக்கு வந்தது. பொதுமக்கள் அதிகம் பேர் வந்து வாங்கி சென்றதால் கடையை திறந்த அரை மணிநேரத்தில் தக்காளி முழுவதும் விற்று தீர்ந்துவிட்டது. கிடைக்காதவர்களுக்கு மறுநாள் காலையில் சீக்கிரமாக வந்து வாங்கி கொள்ளும்படி கூறி இருக்கிறோம். தக்காளியுடன் வழக்கமாக வழங்கப்படும் உணவு பொருட்களும் வினியோகம் செய்து வருகிறோம். ஆனால் பொதுமக்கள் தக்காளி வாங்கி செல்வதில்தான் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்.' என்றார்.
இதுகுறித்து எழும்பூர், பழைய பங்களா தெருவைச் சேர்ந்த ராஜேந் திரன் கூறும் போது, 'முதல் நாள் விற்பனையில் தக்காளி தரமாக இருந்தது, இன்று (நேற்று) தக்காளி விற்பனையில் சற்று தரம் கொஞ்சம் குறைவாக சிறிய தக்காளிகளாக இருந்தது. மற்றப்படி காலையில் சீக்கிரமாக ரேஷன் கடைகளுக்கு செல்பவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி வாங்கி கொள்ள முடிகிறது. காலதாமதமாக வருபவர்களுக்கு தக்காளி கிடைப்பதில்லை. இதற்காக எவரையும் குறை கூறி பலனில்லை. விற்பனைக்கு தேவையான தக்காளிகளை கொண்டுவந்து விற்பனை செய்ய வேண்டும்' என்றார்.
இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரி ஆர்.எம்.வடிவேலு கூறும்போது, 'பருவம் தவறிய மழை பெய்ததால் தான் இந்த நிலை. குறிப்பாக கோடையில் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் தக்காளி செடிகளே அழுகி போய்விட்டன. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்தது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட் என்பது தென்னிந்திய மார்க்கெட் என்பதால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வழக்கம் போல் 90 சதவீதம் தக்காளி வருகிறது. ஆனால் விலை அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஒட்டப்பள்ளியிலேயே 14 கிலோ தக்காளி ரூ, 1,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கு மேல் போக்குவரத்து, கூலி போன்ற செலவினங்கள் இருக்கிறது. எப்படியும் அடுத்த 15 நாட்களில் தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. காய்கறி மட்டும் அல்லாது, துவரம்பருப்பு, பாசி பருப்பு, நிலக்கடலை போன்றவையும் விலை அதிகரித்து உள்ளது.
எண்ணெய் வித்துகள் விலை அதிகரித்துள்ளதால் நல்லெண்ணைய், கடலை எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொப்பரை விலை குறைவாக இருப்பதால் தேங்காய் எண்ணெய் விலை குறைவாக இருக்கிறது. இருந்தாலும் உணவு பண்டங்கள் விலைகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.