< Back
மாநில செய்திகள்
மளிகை பொருட்கள் விலை உயா்வு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மளிகை பொருட்கள் விலை உயா்வு

தினத்தந்தி
|
11 Oct 2023 12:45 AM IST

தீபாவளி பண்டிகை நெருங்கும்நிலையில் கோவையில் மளிகை பொருட்களின் விலை உயா்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.


தீபாவளி பண்டிகை நெருங்கும்நிலையில் கோவையில் மளிகை பொருட்களின் விலை உயா்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.


பருப்பு விலை உயர்வு


கோவை மாவட்டத்துக்கு கர்நாடகா, மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.


இந்த ஆண்டு பருப்பு வகைகளின் விளைச்சல் குறைந்ததால் கடந்த சில மாதங்களாக அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக துவரம் பருப்பை சாம்பார் உள்பட சமையலுக்கு அதிகமாக இல்லத்தரசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு, இந்த மாதம் ரூ.180-க்கும் விற்பனையாகிறது.


தீபாவளி பண்டிகை


தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண் டாடப்படுகிறது. இதைெயாட்டி வீடுகளில் இனிப்பு, காரம் வகை கள் மற்றும் சமையலுக்கான பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் மளிகை பொருட்களின் விலை உயர்வு இல்லத்தரசிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவை டி.கே.மார்க்கெட் மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகி நல்லப்பாண்டி கூறியதாவது:-


ஆந்திரா, கேரளா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் தான், தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்து, பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களின் இருந்து வரும் மளிகை பொருட்களே விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக மளிகை பொருட்கள் கோவைக்கு கொண்டுவரப்படுகின்றன.


பண்டிகைகள்


கடந்த மாதம் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் லாரி வாடகை உயர்த்தப்பட்டது. இது போன்ற காரணங்களால் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு தற்போது பருப்பு வகைகளின் விலை உயர்ந்து உள்ளது.


2 மாதங்களுக்கு முன்பு ரூ.400-க்கு விற்ற சீரகம் தற்போது ரூ.800-க்கு விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வு தற்காலிகம் தான். இனி வரும் நாட்களில் ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்குவதால் மளிகை பொருட்க ளின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


சீரகம் -ரூ.800


கோவை டி.கே.மார்க்கெட் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மளிகை பொருட்களின் விலை நிலவரம் (கிலோவில்) வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் 2 மாதங்களுக்கு முன்பு விற்ற விலை)


கடலை பருப்பு - ரூ.100 (80), உருட்டு உளுந்தம் பருப்பு - ரூ.145 (ரூ.120), பாசி பருப்பு - ரூ.140 (ரூ.90), பச்சை பாசி பருப்பு - ரூ.140 (ரூ.90), சிவப்பு மைசூரு பருப்பு -ரூ.90, காய்ந்த நீட்டு மிளகாய் - ரூ.270 (ரூ.260), சீரகம் -ரூ.800 (ரூ.400), வெள்ளை சுண்டல் - ரூ.170 முதல் ரூ.190 (ரூ.140), கருப்பு சுண்டல் - ரூ.90 (ரூ.70), மிளகு ரூ.800 (ரூ.600), சர்க்கரை ரூ.42, பொட்டுக்கடலை ரூ.120, கடுகு- ரூ.120, தனி மல்லி ரூ.120-க்கு என விற்பனையானது.


மேலும் செய்திகள்