< Back
மாநில செய்திகள்
கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது - சென்னை ஐகோர்ட்டு கருத்து
மாநில செய்திகள்

'கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது' - சென்னை ஐகோர்ட்டு கருத்து

தினத்தந்தி
|
10 May 2023 7:13 PM IST

கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாராம் செழிக்கும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவில், திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்ததற்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும், இதனை விரைவாக வழங்கிட ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முழு தொகையையும் ஆலை நிர்வாகத்தால் வழங்க இயலாது என்றும், நிலுவைத் தொலையில் 57 சதவீதத்தை மட்டுமே வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதன்படி 78 கோடி ரூபாய் வழங்குவதாகவும், இதில் 45 கோடி ரூபாய் ஏற்கனவே டெப்பாசிட் செய்யப்பட்டு விட்டதாகவும் ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீதம் உள்ள 33 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 3 மாதங்களில் வழங்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது எனவும், அவர்களின் உழைப்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாராம் செழிக்கும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்