பெரம்பலூர்
பெரம்பலூரில் காய்கறிகள் விலை உயர்வு; இல்லத்தரசிகள் கவலை
|பெரம்பலூரில் காய்கறிகள் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர்.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்து, சைவ உணவை சாப்பிடுவது வழக்கம். தற்போது புரட்டாசி மாதம் என்பதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசை என்பதாலும் நேற்று ஏராளமானோர் காய்கறிகளை வாங்கினர். மேலும் வடமாநிலங்களில் காய்கறிகளின் வரத்து குறைவால் தற்போது காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பெரம்பலூரில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.10 விலை உயர்ந்து கிலோ ரூ.40-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல் கிலோ ரூ.40-க்கு விற்ற கத்தரிக்காய், பீட்ரூட், அவரைக்காய், முள்ளங்கி ஆகியவை தலா ரூ.60-க்கு விற்பனையாகிறது. கிலோ ரூ.35-க்கு விற்ற உருளைக்கிழங்கு ரூ.40-க்கும், ரூ.80 விற்ற கேரட் ரூ.120-க்கும், ரூ.30-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40-க்கும், ரூ.55-க்கு விற்ற பாகற்காய் ரூ.60-க்கும், ரூ.80-க்கு விற்ற காலிபிளவர் ரூ.100-க்கும், ரூ.40-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.100-க்கும், ரூ.30-க்கு விற்ற ஒரு கொத்தமல்லி கட்டு ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தலா ஒரு கிலோ ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மாங்காய் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. காய்கறிகளின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். இனி வரும் நாட்களிலும் காய்கறிகளின் விலை இதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது. புரட்டாசி மாதம் முடியும் வரை காய்கறிகளின் விலை அதிகமாகத்தான் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.