சேலம்
சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு-ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை
|விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைவு காரணமாக சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி
கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி ஓட்டல் உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மேட்டூர், மேச்சேரி, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தக்காளி தேவை அதிகமாக உள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து தான் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் 11 உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதுதவிர, சேலத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கும் வெளி மாவட்டங்களில் இருந்து தான் மொத்த வியாபாரிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
கிலோ ரூ.80-க்கு விற்பனை
ஆனால் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தைகளுக்கும், தினசரி மார்க்கெட்டிற்கும் தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதாவது, தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சூரமங்கலம் மற்றும் அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சந்தைக்கு வருகை தந்த பொதுமக்கள், குறைந்த அளவிலேயே தக்காளிகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது.
விலை உயர வாய்ப்பு இல்லை
இதுகுறித்து உழவர் சந்தை விவசாயிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்திருக்கிறது. இதனால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.100-க்கு வந்துவிடுமோ? என்று பொதுமக்களிடம் அச்சம் ஏற்படுகிறது.
ஆனால் ரூ.80-க்கு மேல் தக்காளி விலை உயர வாய்ப்பு இல்லை, என்றனர். தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் அதன் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.