வேலூர்
தீபாவளி பண்டிகைக்கு வேட்டு வைத்த விலை உயர்வு; இல்லத்தரசிகள் அதிர்ச்சி
|தீபாவளி பண்டிகையையொட்டி மளிகை பொருட்கள், பட்டாசுகள், புத்தாடைகள் விலை ‘கிடு, கிடு’ உயர்வினால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி மளிகை பொருட்கள், பட்டாசுகள், புத்தாடைகள் விலை 'கிடு, கிடு' உயர்வினால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை என்றால் அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசு மற்றும் புத்தாடைகள்தான். அதற்கு அடுத்தப்படியான இடத்தை பிடிப்பது பலகாரங்கள். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பலகாரங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
அதன் காரணமாக அந்த பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 10 நாட்களில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, வெல்லம், எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
அதே போன்று முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவற்றின் விலை கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லரை விற்பனை மளிகை கடைகளில் கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்பனையான துவரம் பருப்பு ரூ.130-க்கும், ரூ.115-க்கு விற்ற உளுந்தம் பருப்பு ரூ.125-க்கும், ரூ.55-க்கு விற்பனையான வெல்லம் ரூ.65-க்கும், ரூ.1,500-க்கு விற்பனையான ஏலக்காய் ரூ.1,700-க்கும் விற்பனையாகிறது.
முழு முந்திரி ரூ.800 முதல் ரூ.840-க்கும், உடைத்த முந்திரி ரூ.700-க்கும், நெய் ரூ.600 முதல் ரூ.700-க்கும், உலர் திராட்சை ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
சூரியகாந்தி எண்ணெய் ரூ.163-க்கும், பாமாயில் ரூ.103-க்கும், நல்லெண்ணெய் ரூ.265-க்கும், கடலை எண்ணெய் ரூ.194-க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.250-க்கும் விற்பனையாகிறது.
கடந்த வாரத்தை விட எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விலை உயர்வு
தீபாவளி பண்டிகையன்று அனைவரும் புத்தாடைகள் அணிவது வழக்கம். தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வேலூர் மாநகரில் உள்ள சிறிய மற்றும் பெரிய ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் எடுக்க கூட்டம் அலைமோதுகிறது. குடும்பம், குடும்பமாக சென்று அனைவருக்கும் தேவையான பல்வேறு மாடல்களில் துணிகளை தேர்வு செய்கிறார்கள்.
கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களிடம் போதிய பணப்புழக்கம் இல்லாததால் கடந்த சில ஆண்டுகள் தீபாவளி பண்டிகைக்கு சரியாக விற்பனை இல்லை. ஆனால் இந்த ஆண்டு விற்பனை படுஜோராக உள்ளது.
ஜவுளிக்கடையில் ஒரு சில மாடல்களில் உள்ள துணிகளின் விலையில் பெரிதாக மாற்றமில்லை. ஆனால் சிலவற்றின் விலை அதிகமாகவே உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
பட்ஜெட் அதிகரிப்பு
இதேபோன்று பட்டாசுகளின் விலையும் சில சில்லரை விற்பனை பட்டாசு கடைகளில் அதிகமாக உள்ளது. பட்டாசு பெட்டியின் எடை மற்றும் பட்டாசுகளின் எண்ணிக்கை குறைவாக வைத்து கடந்தாண்டு விற்ற விலைக்கு அவை விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் சரவெடி, லட்சுமி வெடி, வானவெடிகளின் விலை உயர்ந்துள்ளது. அதனால் அவற்றை குறைவான எண்ணிக்கையில் வாங்கி செல்வதாக இளைஞர்கள் கூறினர்.
தீபாவளியையொட்டி பருப்பு வகைகள், எண்ணெய், துணிகள், பட்டாசுகளின் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமானது. அதனால் சில குடும்பத்தில் ஒருவருக்கு 2 புத்தாடைகள் எடுக்கும் இடத்தில் ஒன்று மட்டுமே எடுக்கும் நிலையும், பல பட்டாசு பாக்ஸ் வாங்கும் விலையில் ஒன்று, இரண்டு பட்டாசு பாக்ஸ் மட்டுமே வாங்கி செல்லும் நிலையும் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அதிக துணிகள் எடுக்க முடியாத நிலை
வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த இல்லத்தரசி ரம்யபிரியா கூறுகையில், சிறுவயது முதலே தீபாவளி பண்டிகை என்றாலே மனதில் அதீத மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்து வீட்டில் அச்சுமுறுக்கு, அதிரசம், குலோப்ஜாமுன், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகள் தயார் செய்து அனைவரும் சந்தோஷமாக சாப்பிடுவோம். பின்னர் இரவில் கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி, சங்கு சக்கரம், வானவெடிகள் வெடித்து அன்றைய தினம் மிகவும் நிறைவாக இருக்கும். தீபாவளியையொட்டி பலவிதமான புத்தாடைகள் எடுத்து தருவார்கள்.
ஆனால் தற்போது விலைவாசி உயர்வு காரணமாக அதிகளவு புத்தாடைகள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. பண்டிகையையொட்டி சிறப்பு தள்ளுபடி என்ற பெயரில் சில துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றின் விலை கூடுதலாக காண்பித்து தள்ளுபடியில் பழைய விலைக்கே கொடுக்கப்படுகிறது. தீபாவளியையொட்டி குழந்தைக்கு பல புத்தாடைகள் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் ஜவுளிக்கடைக்கு சென்றோம். விலை உயர்வு காரணமாக ஓரிரு துணிகளே எடுக்க முடிந்தது என்றார்.
ஆன்லைனில் மளிகை பொருட்கள்...
வேலூர் வள்ளலாரை சேர்ந்த இல்லத்தரசி சித்ரா கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடவில்லை. இந்தாண்டு பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் மனநிலையில் உள்ளோம். ஆனால் மளிகை பொருட்களின் விலை உயர்வால் வேதனை அடைந்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் புலம்பவும் செய்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது எண்ணெய், பருப்பு வகைகளின் விலை குறைவாக காணப்பட்டது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இந்த நிலையில் மளிகை பொருட்கள், பட்டாசுகளின் விலை உயர்வு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மளிகை கடைகளில் விலை உயர்வு என்பதால் பலர் ஆன்லைனில் மளிகை பொருட்கள் வாங்குகின்றனர் என்று தெரிவித்தார்.
எளிமையான தீபாவளி
ராணிப்பேட்டையை சேர்ந்த குடும்ப தலைவி ஜி.லதா கூறுகையில், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தீபாவளி கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மளிகை பொருட்கள், துணிகள், பட்டாசுகள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுஒருபுறம் இருக்க, ஆட்டுக்கறி விலையும் சாமானிய மக்கள் வாங்கும் விலையில் இல்லை. அதுவும் கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி என்றாலே பட்டாசு சத்தம் ஒருவார காலத்துக்கு முன்பே இருந்து கேட்கும். ஆனால் இப்போது சத்தமும் இல்லை. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவிற்கு பணமும் இல்லை. இதனால் பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது போல் மிக எளிமையாக இந்த தீபாவளியை கொண்டாடுகிறோம் என்றார்.
தீப்பெட்டி விலையும் உயர்வு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த செல்வி கூறுகையில், கூலி வேலை செய்து வருகிறோம். தீபாவாளி பண்டிக்கைக்காக குழந்தைகளுக்கு ஜவுளி எடுக்க திருப்பத்தூர் வந்தோம்.
கடந்த ஆண்டு 3 குழந்தைகளுக்கு ரூ.3,000-க்குள் புத்தாடை எடுத்துவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு 3 பேருக்கு ஜவுளி எடுக்க ரூ.4 ஆயிரம் ஆகிவிட்டது. விலை உயர்ந்து விட்டதால் குழந்தைகளுக்கு மட்டுமே ஜவுளி எடுக்க முடிந்தது. எங்களுக்கு எடுக்கவில்லை.
இதுஒருபுறம் இருக்க மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு ரூபாய்க்கு விற்ற தீப்பெட்டி கூட இப்போது ரூ.2 ஆகிவிட்டது. மேலும் எண்ணெய் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் எப்படி பலகாரம் செய்து உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுப்பது என்று தெரியவில்லை. விண்ணை முட்டும் விலைவாசியால் கூலி தொழிலாளியாகிய நாங்கள் அன்றாடம் குடும்பம் நடத்துவதே கடினமாக உள்ளது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்றார்.
2 மடங்கு உயர்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த ராசாத்தி கூறுகையில், ''இன்றைய விலைவாசி அதிகமாக உயர்ந்துள்ளது. ஜவுளி விலை இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பட்டாசுகளும் விலை உயர்வால் தீபாவளியை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்றார்.
சிரமங்களை பார்க்காமல்...
திருவண்ணாமலையை சேர்ந்த குடும்ப தலைவி பிரபாவதி ஆறுமுகம் கூறுகையில், ''கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால் தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நிலை இருந்தது.
இந்த ஆண்டு கொரோனா தொற்று விலகியதால் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட உள்ளனர். நானும் எனது குடும்பத்துடன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாட இனிப்பு வகைகள், ஜவுளிகள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்க மளிகை பொருட்கள் வாங்கியுள்ளோம்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜவுளி மற்றும் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான மளிகை பொருட்களின் விலை உயர்ந்து இருந்தாலும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட சிரமங்களை பார்க்காமல் வாங்கி உள்ளோம். பட்டாசுகளும் தேவையான அளவு வாங்கி உள்ளோம். ஆனால் மழை வந்து விடுமோ என்ற கலக்கத்தில் தான் உள்ளோமே தவிர மற்றபடி தீபாவளி பண்டிகையை இந்த ஆண்டு உற்சாகமாக கொண்டாட உள்ளோம்'' என்றார்.