கன்னியாகுமரி
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமைபுதிய போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேட்டி
|பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் ஹரிகிரண் பிரசாத். இவர் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுந்தரவதனம் நியமனம் செய்யப்பட்டார்.
அவர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குமரி மாவட்டத்தின் 53-வது போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர் புதிய போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னுரிமை
மாவட்ட காவல்துறையை பொறுத்தவரையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது மற்றும் குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்று கொடுக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
குமரி மாவட்டம் சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டம். அதையொட்டி நடக்கக்கூடிய குற்ற சம்பவங்கள், போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். அதுதவிர மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை அறவே ஒழிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இடைவெளியை குறைக்க...
பொதுமக்களிடம் இருந்து வருகிற தகவல்களை வைத்துதான் போலீசார் பெரும்பான்மையான சமயங்களில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஏதுவாக அமையும். போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்தால் பொதுமக்கள் தயக்கமின்றி போலீசாரை அணுகலாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தங்களைச் சார்ந்தவருக்கோ, தங்களுக்கு தெரிந்தவருக்கோ நடக்கும்போது உடனடியாக போலீசாரை தயக்கமின்றி அணுகலாம்.
எனது செல்போன் எண் 94981 88488. இதில் என்னை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ, குறுந்தகவல்கள் மூலமாகவோ தகவல்களை தெரிவிக்கலாம். காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு இவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி மேலாளர்
புதிதாக பொறுப்பேற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனத்தின் சொந்த ஊர் வேலூர். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி மேலாளராக பணியாற்றினார். 2016-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்றார். 2019-ம் ஆண்டு உதவி சூப்பிரண்டாக நெல்லை மாவட்டத்தில் பயிற்சி பெற்றார்.
2020- 2021ம் ஆண்டில் மகாபலிபுரம் உதவி சூப்பிரண்டாகவும், அதே ஆண்டில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், 2021, 2022-ம் ஆண்டுகளில் சென்னை மாதவரம், வண்ணார்பேட்டை துணை கமிஷனராகவும் பணிபுரிந்தார். 2022-ம் ஆண்டில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், குமரி மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.