திருமணம் செய்வதாக ஆசைகாட்டி: ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி -டாக்டர் கைது
|சென்னையில் திருமணம் செய்வதாக ஆசை காட்டி, ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சத்தை சுருட்டிய டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் மனோஜ் சார்லஸ் (வயது 33). இவர், பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்தவர். இவர் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளம்பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இளம்பெண்ணின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
அந்த பெண், பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இளம்பெண்ணும், டாக்டர் மனோஜ் சார்லசும் உல்லாசமாக சுற்றித்திரிந்தனர். திருமணம் செய்வதாக ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் இருந்து ரூ.60 லட்சம் வரை டாக்டர் சுருட்டி உள்ளார்.
ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பது போல, ஒரு கட்டத்தில், இளம்பெண்ணிடம் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்த டாக்டர் மனோஜ் சார்லஸ், அவரை திருமணம் செய்யவும் மறுத்ததாக தெரிகிறது.
கைதானார்
இதனால் கோபம் கொண்ட இளம்பெண், டாக்டர் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் டாக்டர் மனோஜ் சார்லசை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.