< Back
மாநில செய்திகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு திண்டுக்கல் வருகிறார்
மாநில செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு திண்டுக்கல் வருகிறார்

தினத்தந்தி
|
18 Nov 2022 11:51 PM GMT

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் விரைவில் நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு திண்டுக்கல் வருகிறார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 11-ந்தேதி 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதேபோல் இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களையும் அவர் வழங்கினார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 2018-19 மற்றும் 2019-20 ஆகிய 2 கல்வியாண்டுகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து முடித்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் 2020-21 மற்றும் 2021-22 ஆகிய 2 கல்வியாண்டுகளில் படித்து முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே தனி விழாவாக நடத்தி பட்டம் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி வருகை

அதன்படி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் பல்கலைக்கழகம் சார்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.

இருப்பினும் பிரதமர் மோடி வந்திருந்த நிலையில், தற்போது ஜனாதிபதியும் திண்டுக்கல் வரவுள்ளதாக கூறப்படும் தகவலை கல்வியாளர்கள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதன்மூலம் மற்றொரு பிரமாண்ட விழாவிற்கு காந்திகிராம பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்