< Back
மாநில செய்திகள்
18 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும்    டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்    கடலூரில் நடந்த சங்க போராட்ட ஆயத்த மாநாட்டில் தீர்மானம்
கடலூர்
மாநில செய்திகள்

18 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் கடலூரில் நடந்த சங்க போராட்ட ஆயத்த மாநாட்டில் தீர்மானம்

தினத்தந்தி
|
28 July 2022 5:07 PM GMT

18 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்திலேயே பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆயத்த மாநாடு

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் போராட்ட ஆயத்த மாநாடு நேற்று கடலூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் பழனிபாரதி முன்னிலை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் ஜெயசந்திர ராஜா வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் தொடக்க உரையாற்றினார். சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.

இந்த மாநாட்டில் 18 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்திலேயே பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரமும், குறைந்தபட்ச பென்ஷன் ரூ.10 ஆயிரமும் வழங்கிட வேண்டும். ஏ.பி.சி.சுழற்சி முறையில் பணியிட மாறுதல்கள் வழங்க வேண்டும். இறந்து போன டாஸ்மாக் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாநில தலைவர்கள் குப்புசாமி, ராஜன், திருநாவுக்கரசு, லூயிஸ், பொருளாளர் ராசாமணி, கடலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, கடலூர் மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமாரன், கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.

கூட்டமைப்பு உருவாக்கம்

கூட்டத்திற்கு பிறகு சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம், நாம் தமிழர் தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கம் ஆகிய சங்கங்களை இணைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளோம். வருகிற 20-ந் தேதிக்குள் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லையெனில் மாநிலம் முழுவதும் 5 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகள்