பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27-ந்தேதி குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
|பழனி முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பிலான வரைவு திட்டத்திற்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல்,
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோவிலில், பெரும் பொருட்செலவில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், பழனி முருகன் கோவிலில் 88 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதில் திருக்கோவில் நிதியின் மூலம் 26 பணிகளும், உபயதாரர்கள் மூலம் 62 பணிகளும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த பணிகள் முழுமை பெற்று பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் வரும் ஜனவரி 27-ந்தேதி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார். மேலும் பழனி முருகன் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பிலான வரைவு திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.