< Back
மாநில செய்திகள்
விண்ணப்பங்கள் பதிவுக்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் தொடக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

விண்ணப்பங்கள் பதிவுக்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் தொடக்கம்

தினத்தந்தி
|
25 July 2023 12:20 AM IST

விண்ணப்பங்கள் பதிவுக்கான முதற்கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கியது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 129 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம்கள் அந்தந்த ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளின் அருகே உள்ள பள்ளிகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்டவைகளில் நேற்று முதல் தொடங்கியது.

சிறப்பு முகாம்கள்

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்ட சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் தாலுகாவில் வேலூர், மேலப்புலியூர் (கிழக்கு, மேற்கு), லாடபுரம் (கிழக்கு), அம்மாபாளையம், பொம்மனப்பாடி, சத்திரமனை, களரம்பட்டி ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் மலையாளப்பட்டி, உடும்பியம், தொண்டமாந்துறை (மேற்கு, கிழக்கு), வேப்பந்தட்டை (வடக்கு, தெற்கு), வெங்கனூர், வெண்பாவூர், தழுதாழை, வெங்கலம் (மேற்கு, கிழக்கு) ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் குன்னம் தாலுகாவில் புதுவேட்டக்குடி, ஓலைப்பாடி (கிழக்கு, மேற்கு), துங்கபுரம் (வடக்கு, தெற்கு), வடக்கலூர், பரவாய் (கிழக்கு, மேற்கு), வசிஷ்டபுரம், ஒகளுர் (மேற்கு, கிழக்கு), கிழுமத்தூர் (தெற்கு, வடக்கு), பெரியம்மாபாளையம், அத்தியூர் (வடக்கு, தெற்கு), திருமாந்துறை, வயலப்பாடி, பெரியவெண்மணி (மேற்கு, கிழக்கு), குன்னம், கீழப்பெரம்பலூர், சு.ஆடுதுறை, வரகூர், அகரம் சீகூர், கொளப்பாடி, காடூர் (தெற்கு, வடக்கு), பெண்ணக்கோணம் (தெற்கு) ஆகிய கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

தாலுகா-பேரூராட்சி பகுதிகளில்...

ஆலத்தூர் தாலுகாவில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், மாவிலங்கை, இரூர், புதுஅம்மாபாளையம், பாடாலூர் (கிழக்கு, மேற்கு), சிறுவயலூர், டி.களத்தூர், கண்ணப்பாடி, தேனூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. குரும்பலூர் பேரூராட்சி பகுதியில் குரும்பலூர் (வடக்கு, தெற்கு), பூலாம்பாடி பேரூராட்சியில் பூலாம்பாடி (மேற்கு, கிழக்கு), அரும்பாவூர் பேரூராட்சியில் அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் பெண்ணக்கோணம் (வடக்கு) ஆகிய கிராமங்களில் ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் முதற்கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

முகாமில் கலந்து கொள்ள டோக்கன் பெற்ற குடும்ப தலைவிகள் தங்களது விண்ணப்பங்கள் மற்றும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றை எடுத்து கொண்டு தங்களுக்கு முகாம் நடைபெறும் இடங்களுக்கு ஆர்வத்துடன் வந்து காத்திருந்து விண்ணப்பங்களை பதிவு செய்து விட்டு சென்றனர். ஒவ்வொரு முகாமிலும், குடும்ப தலைவிகளான விண்ணப்பதாரர்கள் அமரும் வகையில் போதிய எண்ணிக்கையில் இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரின் விவரங்களை பதிவு செய்யவும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய இயலாதவர்களுக்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் உதவி செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். குரும்பலூரில் அரசு தொடக்கப்பள்ளி, சமுதாய கூடத்தில் நடந்த சிறப்பு முகாமினை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முதற்கட்ட சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. பெரம்பலுார் மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகளில் 2-ம் கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 5-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளான நேற்று 14,580 விண்ணப்பதாரர்களில் 11,476 பேரின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்