பெரம்பலூர்
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று முதற்கட்ட நேர்முக தேர்வு
|108 ஆம்புலன்சுக்கு மருத்துவ உதவியாளர்-டிரைவர் பணியிடங்களுக்கு முதற்கட்ட நேர்முக தேர்வு பெரம்பலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தமிழகத்தில் 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கு முதற்கட்ட நேர்முக தேர்வு பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் மருத்துவ உதவியாளருக்கு தேவையான கல்வி மற்றும் தகுதிகள், நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களின் வயது 19 வயதுக்கு மேலும் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வு முறையானது முதலில் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவம் சார்ந்த அடிப்படை முதல் உதவி, செவிலியர் தொடர்பான அடிப்படை அறிவு பரிசோதிக்கப்படும். இறுதியாக மனிதவள துறையின் நேர்முகதேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
அதேபோல் டிரைவர் பணிக்கு உண்டான தகுதிகள் கட்டாயம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். டிரைவர் உரிமம் தொடர்பான தகுதிகள் இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முழுமை பெற்று இருக்க வேண்டும். தேர்வு முறையானது முதல் கட்டமாக எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வள நேர்காணல், சாலை விதிகள் சம்பந்தமான தேர்வு, கண்பார்வை திறன் சோதிக்கும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். அவசர மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற்றவர்கள் 12 மணி நேர இரவு மற்றும் பகல் சுழற்சி முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர். நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்களது கல்வி தகுதி, ஓட்டுனர் உரிமம், முகவரி சான்று, அடையாள சான்று ஆகியவைகளின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.