திருவண்ணாமலை
நீண்ட நேரம் காத்திருக்கும் கர்ப்பிணிகள், நோயாளிகள்
|பழையனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் கர்ப்பிணிகள், நோயாளிகள் அவதிபடுகின்றனர். அவர்களுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழையனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் கர்ப்பிணிகள், நோயாளிகள் அவதிபடுகின்றனர். அவர்களுக்கு குறித்த நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை மையமாகக் கொண்டு சுற்று வட்டார பகுதிகளான பேராயம்பட்டு, நவம்பட்டு, சின்னகல்லப்பாடி, தச்சம்பட்டு, சோவூர், தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, பெரியகல்லப்பாடி புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் இங்கு கர்ப்பிணிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருவது வழக்கம்.
நீண்ட நேரம் காத்திருப்பு
ஒவ்வொரு வாரமும் பரிசோதனை நடைபெறுவதால் காலை முதலே அவர்கள் வந்து விடுகின்றனர். ஆனால் குறித்த நேரத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் வராததால் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. கர்ப்பிணிகளிடம் கனிவான முறையில் செவிலியர்கள் நடந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருவதால் பாம்பு, நாய், தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு இங்கு முதலுதவி கூட அளிக்கப்படுவது கிடையாது. இதனால் கடும் சிரமப்பட்டு வருவது மட்டுமல்லாமல் வெகு தூரத்தில் இருக்கும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
குறித்த நேரத்தில் டாக்டர்கள் வராததால் செவிலியர்கள் இருந்தும் அவர்கள் எந்த விதமான முதலுதவியும் அளிப்பதில்லை என்றும், இங்கு வரும் நோயாளிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கூறியதாவது:-
ஏழை எளியவர்கள் மட்டுமே அரசு சுகாதார நிலையத்தையும் மருத்துவமனையையும் நாடக்கூடிய சூழல் நிலவிவருகிறது. இப்பகுதிகளில் விபத்தில் சிறிய காயம் ஏற்பட்டால் கூட அதற்காக நாங்கள் சுகாதார நிலையத்திற்கு வந்தால் வெகு நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. செவிலியர்கள் இருந்தும் அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.
அடிப்படை வசதிகள்
மேலும் இங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. அதனால் நீங்கள் திருவண்ணாமலைக்கு சென்று சிகிச்சை பெற்று வாருங்கள் என்று அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதில்லை. எங்கள் பகுதிகளில் இருக்கும் செவிலியர்கள் கூறுவதை நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஆனால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைக்கப்படுகின்றனர். நாங்கள் வந்து வெகு நேரம் காத்திருந்தும் எந்தவிதமான மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுவதில்லை. மேலும் நீண்ட நேரம் காத்திருப்பதால் கடும் சிரமமாக உள்ளது.
மேலும் ஊட்டச்சத்து பெட்டகம் சரியான முறையில் வழங்குவதில்லை. இதுகுறித்து செவிலியரிடம் கேட்டால் எங்களை அலைக்கழிக்கின்றனர். அரசு வழங்கும் கர்ப்பிணி உதவித்தொகை குறித்த நேரத்தில் வருவதும் கிடையாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் எந்தவிதமான பதிலும் அளிப்பது கிடையாது.
உதவித்தொகை
இப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உள்ளனர். அவர்களுக்கு முறையான ஊட்டச்சத்து பெட்டகம், உதவித்தொகை உள்ளிட்டவற்றை உடனுக்குடன் கிடைப்பதற்கு உண்டான வழிவகை செய்ய வேண்டும். பெரும்பாலும் பழையனூர் சுகாதார நிலையம் கிராமத்தை உள்ளடங்கிய பகுதியில் இருப்பதால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். அதற்கான அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. மேலும் இங்கு வரும் நோயாளிகளுக்கு குடிநீர் வசதிகள் கூட இல்லை என்பது வேதனைக்குரியதாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.