திருவள்ளூர்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கர்ப்பிணிக்கு அடி-உதை: 4 பேர் மீது வழக்கு
|பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கர்ப்பிணியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காக்களூர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டிசாமி. இவர் அதே பகுதியை சேர்ந்த சுகுணா என்பவரிடம் ரூ.15 ஆயிரத்தை கடனாக பெற்றார். அதற்காக அவர் மாத மாதம் பணம் செலுத்தி வந்தநிலையில் கடந்த 8 மாதங்களாக அவர் பணம் கட்டவில்லை. பணத்தை திருப்பித் தருமாறு சுகுணா மற்றும் அவரது உறவினர்களான செம்மலரசன், பவித்ரா, கீர்த்தி ஆகியோர் சேர்ந்து ஆண்டிசாமியின் வீட்டுக்கு சென்று கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆண்டிசாமியின் மகள் மாலினியை (வயது 23) சுகுணா தாக்கியதாக கூறப்படுகிறது. மாலினி 3 மாதம் கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாலினி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக மேற்கண்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதைபோல் கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வெங்கடேசன் தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனி, கோவிந்தன் உட்பட 3 பேர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்த மனதில் வைத்து வெங்கடெசனை தகாத வார்த்தையால் பேசி தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவி சஞ்சம்மாளையும் தாக்கி விட்டு தப்பி சென்றனர். நடந்த சம்பவம் குறித்து சஞ்சம்மாள் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக மேற்கண்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.