< Back
மாநில செய்திகள்
தாய் இறந்த விரக்தியில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தாய் இறந்த விரக்தியில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
2 Aug 2023 12:27 AM IST

தாய் இறந்த விரக்தியில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் இறந்த விரக்தியில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி

அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமம், கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகன், ராதிகா (வயது 27) என்ற மகள் உள்ளனர்.

இதில் ராதிகாவுக்கும், ஆரணி எஸ்.வி.நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மேலும் ராதிகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

சிறுவயதில் இருந்தே தாய் சுமதி மேல் ராதிகா மிகவும் பாசமாக இருந்துள்ளார். இதனால் ஆரணியில் கணவருடன் வசித்து வந்த ராதிகா அடிக்கடி மூஞ்சூர்பட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து சுமதியை பார்த்துவிட்டு செல்வார்.

தாய் சாவு

இந்த நிலையில் சர்க்கரை நோயால் சுமதி அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை அறிந்த ராதிகா பதறிபோய் உடனடியாக ஆரணியில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து தனது தாய்க்கு உதவியாக இருந்து அவரோடு தங்கி பணிவிடை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி காலை சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார். தாய் இறந்ததால் ராதிகா மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அன்று சுமதியின் உடல் மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்து மூஞ்சூர்பட்டு கிராமத்தில் உள்ள வீட்டில் இறுதி சடங்கு செய்ய வைக்கப்பட்டது. தாய் உடலை பார்த்து ராதிகா கதறி அழுத சம்பவம் கிராம மக்கள் நெஞ்சை உருக்கியது.

அப்போது துக்கம் தாளாமல் ராதிகா ஓடிப்போய் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராதிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சாவில் கூட தாயை பிரியாத பாசக்கார மகளின் இந்த முடிவு கிராம மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்