< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
31 Aug 2023 12:15 AM IST

இரணியல் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திங்கள்சந்தை:

இரணியல் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

5 மாத கர்ப்பிணி

இரணியல் போலீஸ் சரகம் பரசேரி பகவத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35), கொத்தனார். இவருடைய மனைவி சுபாலட்சுமி (25). இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாவார்.

இந்த நிலையில் அய்யப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஓணம் விழாவையொட்டி வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யப்பன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சுபாலட்சுமி பலமுறை அய்யப்பனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் போனை எடுத்துப் பேசாமல் இருந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் வீட்டில் குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டு சுபாலட்சுமி அறைக்கு உறவினர்கள் சென்றனர். அப்போது அங்கு சுபாலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுபாலட்சுமியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுபாலட்சுமி இறந்து விட்டதாக கூறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவர் செல்போனை எடுத்து பேசாததால், சுபாலட்சுமி தற்கொலை செய்யும் விபரீத முடிவுக்கு வந்து தூக்குப்போட்டு கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்