< Back
மாநில செய்திகள்
இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரால் கர்ப்பம்: வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்று மயங்கிக்கிடந்த பிளஸ்-2 மாணவி...!
மாநில செய்திகள்

இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரால் கர்ப்பம்: வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்று மயங்கிக்கிடந்த பிளஸ்-2 மாணவி...!

தினத்தந்தி
|
1 Oct 2022 4:53 AM IST

இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரால் கர்ப்பம் அடைந்து, வீட்டின் கழிவறையில் பிரசவித்து மயங்கிய கிடந்த பிளஸ்-2 மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.



வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். அந்த செல்போனில் இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி(வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் காய்கறி கடையில் வேலைபார்த்து வந்தார்.

இந்த பழக்கத்தில் அவர்கள் 2 பேரும் தனியாக அடிக்கடி சந்தித்தனர். அப்போது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த சிறுமி கா்ப்பம் அடைந்தார்.

இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. யாரிடமும் அதுபற்றி சொல்லாமல் வீட்டின் கழிவறைக்கு சென்றார்.

பிரசவ வலியையும் பொறுத்துக்கொண்டு, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் சிறுமி மயங்கிய நிலையில் அங்கு கிடந்தார். இதற்கிடையே அந்த சிறுமியை தேடி குடும்பத்தினர் சென்றபோது, அங்கு அவர் பிரசவித்து தாயும், சேயுமாக கிடந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். விசாரணையில், வெற்றிமணி என்பவர் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதார செவிலியர் ஒருவர், சிறுமியையும் குழந்தையும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். அதன்பின் இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது சம்பந்தமாக மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிமணியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்