< Back
மாநில செய்திகள்
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் தகவல்
அரியலூர்
மாநில செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை-கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
17 Sept 2023 12:26 AM IST

அரியலூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு அலுவலகங்களில் நீர் தேங்காமல் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் தொட்டி மூடி இருப்பதையும், நீர்த்தேக்க தொட்டிகளில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளில் சுகாதார உறுதிமொழி மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஏடிஸ் கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகளையும், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் ஓடு போன்ற கொசு வளரும் காரணிகளை முற்றிலும் அகற்ற வேண்டும். இதேபோன்று, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி உள்ளிட்டவற்றை 3 நாட்களுக்கு ஒருமுறை பிளீசிங்க் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பின்னர், தண்ணீரை நிரப்பி மூடி வைக்க வேண்டும்.

வீடுகளின் அருகே உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயர், தேங்காய் சிரட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் டெங்கு காய்ச்சல், இதர காய்ச்சல்களில் இருந்து பாதுகாப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) அஜித்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்