மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
|சராசரி மழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:-
மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சராசரி மழையை எதிர்கொள்ள சென்னை தயாராகவே உள்ளது. மழை நேரத்தில் நிறுத்தப்பட்ட வடிகால் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.
செவ்வாய்க்கிழமை தோறும் சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும் நடவடிக்கைகள் எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.