வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
|வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழையின் போது புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அனைத்து துறை அலுவலர்களும், காவல்துறை மற்றும் முப்படையைச் சேர்ந்த அலுவலர்களும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தங்களது துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில் பேசிய தலைமை செயலாளர், "பலவீனமான மற்றும் சேதமடைந்த பொதுக் கட்டிடங்களை கண்டறிந்து பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு கட்டிடங்களின் மேல் தளத்தை ஆய்வு செய்து, குப்பையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள், பலவீனமான மின்வழித்தடங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். சுரங்கப் பாதைகளில் தேங்கும் நீரின் ஆழத்தை கண்டறியும் பொருட்டு, சுரங்கப் பாதைகளில் இருபக்கமும் அளவீடுகள் எழுதப்பட வேண்டும். சுரங்கப்பாதைகளில் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மழை நீர் வடிகால் பணிகளை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை ஆய்வு செய்து, அவை முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மரக்கிளைகள், விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனமும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சிகள் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்க வேண்டும். புயல் மற்றும் கனமழையின் காரணமாக ஏற்படும் பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.