வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை -முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை
|வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றது.
சென்னை,
தமிழக சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது. சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை 6.10 மணிக்கு கூடியது. 50 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதை நிரந்தர சட்டமாக்குவதற்காக தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக வரும் தொழில் முதலீடுகள், ஏற்கனவே இருக்கும் தொழில்களின் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பருவமழைமுன்னெச்சரிக்கை
மேலும், தமிழகத்தில் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உணவுத்துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டுள்ள தயார் நிலை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது நெல் கொள்முதலுக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை காலம் என்பதால் 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. கொள்முதலுக்காக கொண்டுவரப்படும் நெல், மழையில் நனைந்து வீணாகாதபடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அறிவுரை
அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கினார். 17-ந் தேதி கூட இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் யாரும் ஆத்திரமூட்டும் அளவுக்கு செயல்பட்டாலும், அமைச்சர்கள் அமைதியுடன் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
பொது இடங்களில் பேசுவது குறித்த குற்றச்சாட்டுகள் வந்திருப்பதை மனதில் வைத்து சர்ச்சை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அமைச்சரவையில் மாற்றம் செய்ய நிர்ப்பந்தம் வரும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார் என்று கூறப்பட்டது.