நாகப்பட்டினம்
கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
|இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பேபி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள 12 புயல் பாதுகாப்பு மையங்களும், 5 பல்நோக்கு பேரிடர் மையங்களும், தற்காலிக நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகள் சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளனவா என உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளையும், ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் 5000 முதல்நிலை பொறுப்பாளர்களுக்கும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் 300 தன்னார்வலர்களுக்கும் பேரிடர் கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், மணல், சவுக்கு குச்சிகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மையம்
கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான இடங்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை சார்பில் மருந்து பொருட்கள் மற்றும் இதர வசதிகள் தயார்நிலையில் உள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் உபகரணங்கள், போலீஸ் துறை உபகரணங்கள், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் மீட்பு உபகரணங்கள் மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் மின் கம்பம், மின்மாற்றிகள் போன்ற மின்சாதன உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 1077 என்ற தொலைபேசி எண்கள் இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான மரங்கள், கட்டிடங்கள் இருந்தால் அது குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவித்திடவும், அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுதா ராணி, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் செல்வகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.