< Back
மாநில செய்திகள்
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: குழந்தை பெற்றெடுத்த சிறுமி... அடுத்த நடந்த விபரீதம்
மாநில செய்திகள்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: குழந்தை பெற்றெடுத்த சிறுமி... அடுத்த நடந்த விபரீதம்

தினத்தந்தி
|
2 May 2024 7:50 AM IST

போலீசார் விசாரணையில், தாயும், மகளும் சேர்ந்து பச்சிளம் குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த உத்திராபதியின் மகன் அன்புதுரை (வயது 21). இவர் அரியலூர் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் கர்ப்பம் அடைந்த அந்த சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்புதுரையை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமியும், அவரது தாயும் வீட்டில் இருந்த பச்சிளம் குழந்தையை கடந்த 28-ந்தேதி இரவு 10 மணியில் இருந்து காணவில்லை என மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் ஆகாமலேயே குழந்தை பிறந்ததை அடுத்து போலீசாருக்கு சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்கள் மீது போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம் உறுதியானது. அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், தாயும், மகளும் சேர்ந்து பச்சிளம் குழந்தையை கொன்று பெரிய மடையன் ஏரிக்கரையின் ஓரத்தில் குழி தோண்டி புதைத்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திற்கு மீன்சுருட்டி போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ரகுமான் ஆகியோர் சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கொன்று புதைத்துவிட்டு அந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக வாசனை திரவியத்தை தாய், மகள் இருவரும் ஊற்றி உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

பச்சிளம் குழந்தையை தாய், மகள் இருவரும் சேர்ந்து கொன்று புதைத்த சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்