தென்காசி
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
|சுரண்டை அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
சுரண்டை:
சுரண்டை அருகே குறிச்சான்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. பழனிநாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வே.ஜெயபாலன், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, அரசு ஒப்பந்ததாரர் கரையாளனூர் சண்முகவேலு, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். முகாமில் பெண்களுக்கான கருப்பை நோய்கள், பொது சுகாதாரம், நெஞ்சக நோய்கள் (டிபி), சர்க்கரை நோய், எலும்பு முறிவு, தோல் நோய்கள், கண், காது, மூக்கு, தொண்டை பகுதியில் உருவாகும் நோய்கள் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.
மேலும் ரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் முறையாக நெஞ்சக நோய்களுக்கு நடமாடும் வாகனத்திலுள்ள எக்ஸ்ரே கருவிகள் மூலம் எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்யப்பட்டது. டெங்கு கொசுவை ஒழித்து நோய் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம், சித்த மருந்துகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நெட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் செய்திருந்தனர்.